
ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
சண்டிகரில் நடைபெற்று வரும் தேசிய ஓபன் நடை பந்தயத்தில், ஆடவருக்கான போட்டியில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அக்ஷ்தீப் சாதனை படைத்துள்ளார்.
அவர் 20 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை, ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் 38 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் சென்ற ஆண்டு அவர் படைத்த தேசிய சாதனையையே தற்போது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அக்ஷ்தீப் இலக்கை 1:19:55 விநாடிகளில் கடந்தார்.
அதேபோல, உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சுராஜ் பன்வார் 1:19:43 விநாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்து, ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
மயாங்க் அகர்வால்
மயாங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் வீரர் மயாங்க் அகர்வால், விமானத்தில் பயணிக்க சென்றபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான மயாங்க் அகர்வால் , நடப்பு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக உள்ளார்.
வரும் பிப்ரவரி 2-ம் தேதி சூரத் நகரில் ரயில்வே அணிக்கு எதிராக அவரது அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்காக கர்நாடக அணி வீரர்கள் அகர்தலாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட இருந்தனர்.
தண்ணீர் என கருதி விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை அவர் குடித்ததாகவும், பின்னர் அதை உணர்ந்து முழுவதுமாக துப்பிய பிறகு, வாய் பகுதியில் எரிச்சல் இருப்பதாக தெரிவித்த காரணத்தால் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டி20 தரவரிசை
மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்த தீப்தி ஷர்மா
மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை நேற்று ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், இந்தியாவின் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதே இடத்தை, பாகிஸ்தானின் சதியா இக்பாலும் பகிர்ந்து கொள்கிறார்.
இருவரும் தலா 718 புள்ளிகள் பெற்றுள்ளனர்.
அதேபோல, மற்றொரு இந்திய வீராங்கனை ரேணுகா சிங் 10-வது இடத்தில் உள்ளார்.
இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில், 777 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் சோஃபி எக்கல்ஸ்டோன் உள்ளார்.
கேலோ இந்தியா
கேலோ இந்தியா: பதக்கபட்டியலில் மூன்றாவது இடத்தில தமிழகம்
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 6-வது கேலோ இந்தியா போட்டி தொடரின் 12வது நாளான நேற்றைய முடிவில், தமிழக அணி 6 தங்க பதக்கங்களை வென்றது.
நேற்று சென்னையில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் தமிழகத்தின் பிரனவ்- மகாலிங்கம் ஜோடி, மஹாராஷ்டிராவின் தனிஷ்க் முகேஷ் யாதவ்- காஹிர் சமீர் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.
அதேபோல, பெண்கள் இரட்டையர் பிரிவில் ரேவதி- லட்சுமி பிரபா ஜோடி, கர்நாடகாவின் சுஹிதா- ஸ்ரீநிதி ஜோடியை வென்று, தங்க பதக்கம் வென்றது.
இன்று இறுதி நாளை எட்டியுள்ள இந்த போட்டி தொடரில், மஹாராஷ்டிரா அதிக பதக்கங்களை பெற்று முதலிடத்திலும், ஹரியானா இரண்டாம் இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.