ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டிஎன்பிஎல்-க்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று துவங்குகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி, வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று காலை 10 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைத்த வீரர்களையும், விடுவித்த வீரர்களின் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. ஒவ்வொரு அணிகளும் 16 முதல் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக எல்லா அணிகளும் ரூ.70 லட்சம் வரை செலவிடலாம்.
U19 WC: IND vs SA - இறுதிக்கு முன்னேறிய இந்தியா
தற்போது நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில், 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்க அணி. அதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் உதய் மற்றும் சச்சின் தாஸ் கூட்டணியால் இலக்கை அடைந்து, வெற்றி கண்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியை சந்திக்கும்.
ரோஹித் ஷர்மா பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரின் கருத்துக்கு, ரித்திகா ஷர்மா கண்டனம்
ரோஹித் ஷர்மாவின் விளையாடும் திறமையை பற்றி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் கூறிய கருத்தை மறுத்து, ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார். எனினும் அதை பின்னர் நீக்கிவிட்டார். ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் போட்டியிடும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை கோப்பையை வென்றது. எனினும் கடந்த டிசம்பர் மாதம் அவர் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வாங்கப்பட்டு, அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான விளக்கத்தை, MI அணியின் பயிற்சியாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
பாக்., கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதல் - மந்திரி மொஹ்சின் ரசா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மூன்று வருட காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்,"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமையும், பணிவும் அடைகிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி கூறுகிறேன். நாட்டில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிர்வாகத்தில் நிபுணத்துவத்தை கொண்டு வருவதற்கும் நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்