ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடைபெற்றுவரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும், அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்தது.
இதனை அடுத்து, அவரின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், விராட் கோலியின் சகோதரர் விகாஷ் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விகாஷ் கோலி வெளியிட்டுள்ள பதிவில்,"என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை. எங்கள் தாயார் நலமாக உள்ளார். எனவே, யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
கேலோ இந்தியா
கேலோ இந்தியா போட்டிகளில் இரண்டாம் இடத்தை வென்றது தமிழ்நாடு
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் பதக்கபட்டியலில் ஒட்டுமொத்தமாக 98 பதக்கங்களை வென்று தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
முதலிடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், கேடயமும் வழங்கி கௌரவித்தனர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்.
கடந்த 13 நாட்களாக, ஜனவரி 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த போட்டிகளில், முதல் முறையாக தமிழகம் கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து வரலாறு படைத்துள்ளது.
ஒலிம்பிக்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய பாய்மரப்படகு வீரர் விஷ்ணு சரவணன் தகுதி
உலக பாய்மரப்படகு சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெற்றுவருகிறது.
சர்வதேச லேசர் கிளாஸ் பிரிவு பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 152 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், இந்திய வீரர் விஷ்ணு சரவணன் 26-வது இடத்தை பிடித்தார்.
இந்த போட்டியில் 174 புள்ளிகளை பெற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், ஆசிய அளவிலான ரேங்கிங்கில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் விஷ்ணு சரவணன்.
பேட்மிண்டன்
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைபேவின் வாங் ஸு வெய்-ஐ எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த சுற்றின் இறுதியில், ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று, ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுளார்.
இன்று நடைபெறும் இந்த சுற்றில் அவர் இந்திய வீரர் மஞ்சுநாத்துடன் மோதுவார்.