Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சாய் சுதர்சன் 62 ரன்களும், கேஎல் ராகுல் 56 ரன்களும் எடுத்தனர். எனினும் மற்ற வீரர்கள் சொதப்பியதால், 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா டோனி டி ஸோர்ஸி (119 நாட்அவுட் ) மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் (52) அபார ஆட்டம் மூலம் 42.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 ஏலம் நிறைவு
ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்றது. 77 இடங்களுக்கு நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்ற நிலையில், இதில் 72 வீரர்கள் மட்டும் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் அதிகபட்ச தொகை சாதனைகள் முறியடிக்கப்பட்டு மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. அதே போல் பாட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.20.5 கோடிக்கு வாங்கியது. டேரில் மிட்செல், ராச்சின் ரவீந்திரா போன்ற நியூசிலாந்தின் சிறந்த வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து கிரிக்கெட் அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது. பிலிப் சால்ட் சதமடித்து 119 ரன்கள் சேர்த்ததோடு, ஜோஸ் பட்லர் 55 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டோன் 54 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 15.3 ஓவர்களில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.
ஜெர்மனியிடம் தோற்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி
ஆடவர் இந்திய ஹாக்கி அணி 5 நாடுகள் பங்கேற்கும் போட்டியான வலென்சியா 2023இன் மூன்றாவது ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் அபிஷேக் (9') அடித்த ஒரு பீல்ட் கோலுடன் இந்திய அணி முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து ஷம்ஷேர் சிங் (14') மற்றொரு பீல்ட் கோலை அடித்தார். இதன் மூலம் முதல் குவார்ட்டரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது குவார்ட்டரில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. மூன்றாவது குவார்ட்டரில் யாரும் கோல் அடிக்காத நிலையில், நான்காவது குவார்ட்டரில் கடைசி நேரத்தில் ஜெர்மனி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 3-2 என வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024க்கான வர்த்தக சாளரம் மீண்டும் திறப்பு
ஐபிஎல் 2024 ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டு ரூ. 230.45 கோடிக்கு ஆணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏலம் முடிந்த பிறகு புதன்கிழமை முதல் வர்த்தக சாளரம் மீண்டும் திறக்கப்படுவதால், ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை மாற்று அணியிடமிருந்து கைமாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிகளின்படி, ஒரு சீசன் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு வர்த்தக சாளரம் தொடங்கி, ஏல தேதிக்கு ஒரு வாரம் முன்பு வரை திறந்திருக்கும். ஏலத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு வரை செயல்பாட்டில் இருக்கும்.