Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
டிசம்பர் 10 முதல் ஜனவரி 7 வரை தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை (நவம்பர் 30) வெளியிட்டுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரிவாக படிக்க
சையத் மோடி இன்டர்நேஷனல் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி
சையத் மோடி இன்டர்நேஷனல் 2023 பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரியன்ஷு ரஜாவத் சக இந்திய வீரரான சதீஷ் குமாரை எதிர்கொண்டார். சதீஷ் குமார் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறியதால் பிரியன்ஷு ரஜாவத் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கிடையே மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி சக இந்திய வீராங்கனைகளான தன்யா நந்தகுமார் மற்றும் ரிதி கவுர் டூரை எதிர்கொண்டனர். வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த போட்டியில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-5 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். விரிவாக படிக்க
டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது உகாண்டா கிரிக்கெட் அணி
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ள 2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று உகாண்டா கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. இதர 8 அணிகள் பிராந்திய வாரியாக தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. அந்தவகையில், ஆப்பிரிக்க பிராந்திய தகுதிச் சுற்றில் உகாண்டா வெற்றி பெற்று முதல் முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேர்வாகியுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே மற்றும் கென்யா போன்ற அணிகள் கூட தேர்வு பெறாத நிலையில், இது கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. விரிவாக படிக்க
2024 டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்த முடியாது என கைவிரித்தது டொமினிகா
2024 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் எந்தப் போட்டியையும் டொமினிகா நடத்தாது என்று அந்த நாட்டின் கலாச்சாரம், இளைஞர்கள், விளையாட்டு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை ஒரு வெளியீட்டின் மூலம் அறிவித்துள்ளது. போட்டியை நடத்துவதில் இருந்து விலகுவதற்கான காரணத்தையும் டொமினிகா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை ஜூன் 2024 இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டொமினிகா வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோஸ்ட்களில் ஒருவராக முன்மொழியப்பட்டார். இருப்பினும், ஸ்டேடியத்தை மேம்படுத்தும் நேரத்தை மதிப்பீடு செய்த பிறகு, போட்டிக்கு சரியான நேரத்தில் மைதானம் தயாராகாது என்பதால் இந்த முடிவை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
32 வயதே ஆன வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் பேட்டர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
32 வயதே ஆன வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து விளங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். டவ்ரிச் தனது கடைசி டெஸ்டில் விளையாடிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மற்றும் தனது ஒரே ஒரு நாள் போட்டியில் பங்கேற்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில்தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஓய்வு பெறுவதற்கான முடிவை அவர் வெளியிடவில்லை. அவர் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,570 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் 85 கேட்சுகள் மற்றும் ஐந்து ஸ்டம்பிங்குகளை விக்கெட் கீப்பராக செய்துள்ளார்.