Page Loader
2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி; வரலாறு படைத்தது உகாண்டா கிரிக்கெட் அணி
உகாண்டா கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக்கோப்பைக்குத் தகுதி

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி; வரலாறு படைத்தது உகாண்டா கிரிக்கெட் அணி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 30, 2023
05:05 pm

செய்தி முன்னோட்டம்

கிரிக்கெட் வரலாற்றில் புதிய திருப்பமாக, உகாண்டா கிரிக்கெட் அணி 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கான ஆப்பிரிக்க பிராந்திய தகுதிச் சுற்றில் உகாண்டா தனது கடைசி ஆட்டத்தில் ருவாண்டாவுக்கு எதிராக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இடத்தை உறுதி செய்தது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடான ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய இரண்டையும் தாண்டி டி20 உலகக்கோப்பையில் உகாண்டா தனது இடத்தை உறுதி செய்து, 20வது அணியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. முன்னதாக, ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் நமீபியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று, ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

உகாண்டா அணி டி20 உலகக்கோப்பைக்குத் தகுதி

20 teams to participate in T20 World Cup 2024

டி20 உலகக்கோப்பையில் 20 அணிகள்

முன்னெப்போதும் இல்லாத வகையில், 2024 டி20 உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் விளையாட்டை மேலும் பல நாடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 நாடுகளில் 2022 உலகக்கோப்பையில் விளையாடிய இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் முதல் எட்டு இடங்களை பிடித்து தங்கள் இடங்களை உறுதி செய்தன. ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் தங்கள் இடங்களை உறுதி செய்தன. மேலும், போட்டியை நடத்தும் நாடுகளாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

Teams qualified through regional level qualifiers match

தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணிகள்

12 அணிகள் நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தேர்வான நிலையில், எஞ்சிய 8 அணிகள் பிராந்திய அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இருந்து தலா 2 அணிகளும், கிழக்கு ஆசியா-பசிபிக் மற்றும் அமெரிக்கா பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிராந்தியம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட அணிகளின் பட்டியல் பின்வருமாறு:- ஐரோப்பிய தகுதிச்சுற்று : அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து. கிழக்கு ஆசியா-பசிபிக் தகுதிச்சுற்று : பப்புவா நியூ கினியா. அமெரிக்க தகுதிச்சுற்று : கனடா. ஆசிய தகுதிச்சுற்று : நேபாளம் மற்றும் ஓமன். ஆப்பிரிக்க தகுதிச்சுற்று : நமீபியா மற்றும் உகாண்டா.

2024 T20 World Cup Format

2024 டி20 உலகக் கோப்பை போட்டி வடிவம்

2024 டி20 உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். சூப்பர் 8 சுற்றில் மொத்தமுள்ள 8 அணிகளும், நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இந்த பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மேலும், அரையிறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் பட்டத்தை வெளிவதற்கான போட்டியில் களமிறங்கும். 2024 ஜூன் 4 முதல் 30 வரை டி20 உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.