Sports Round Up : டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம்; உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் ரத்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
சீனாவின் ஹங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஏழாவது நாளில் (செப்.30) இந்தியா ஐந்து பதக்கங்களை கைப்பற்றியது. கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடி மற்றும் ஸ்குவாஷ் பிரிவில் சவுரவ் கோசல், அபய் சிங், மகேஷ் மங்கன்கர் அடங்கிய அணி தங்கம் வென்றன. 10,000 மீட்டர் இறுதிப்போட்டியில் கார்த்திக் குமார் மற்றும் குல்வீர் சிங் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி இறுதிப்போட்டியில் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா டிஎஸ் ஜோடி சீனாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து வெள்ளியை வென்றது. இதன் மூலம் மொத்தம் 38 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் இந்திய ஹாக்கி அணி வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சனிக்கிழமை (செப்டம்பர் 30) நடந்த ஆடவர் ஹாக்கி குழுநிலை ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஆட்டத்தின் 11, 17, 33 மற்றும் 34வது நிமிடங்களில் என மொத்தம் நான்கு கோல் அடிக்க, வருண் குமார் இரண்டு கோல் அடித்தார். மேலும் மந்தீப் சிங், சுமித், சம்ஷர் சிங், லலித் குமார் உபாத்யாய் ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், பாகிஸ்தான் சார்பில் முகமது கான் மற்றும் அப்துல் ரானா ஆகியோர் இரண்டு கோல் அடித்தனர். இதன் மூலம் 8 கோல் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ப்ரீத்தி பவார் 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ப்ரீத்தி பவார், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். 19 வயதான ப்ரீத்தி, மூன்று முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவரும், நடப்பு ஆசிய சாம்பியனுமான கஜகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவாவுக்கு எதிராக, 54 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதன் மூலம், பதக்கத்தை உறுதி செய்துள்ளதோடு, 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டி குத்துச்சண்டையில் லோவ்லினா போர்கோஹைன் மற்றும் நரேந்தர் ஆகியோரும் அரையிறுதியை எட்டி பதக்கத்தை உறுதி செய்தனர்.
ஒருநாள் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் மழையால் ரத்து
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) முதல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஒன்றில் வங்கதேச அணியும் மற்றொன்றில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மற்றொரு பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெறவிருந்த இந்தியா-இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து இடையேயான இரண்டு பயிற்சிப் போட்டிகளும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களில் மூன்று பயிற்சி ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் விராட் கோலி?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இரண்டாவது முறையாக பெற்றோராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு இது மூன்றாவது மாதம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் போட்டி சுற்றுப்பயணங்களில் தனது கணவருடன் அடிக்கடி வரும் அனுஷ்கா ஷர்மா, சமீபத்தில் போட்டிகள் அல்லது நிகழ்வுகளில் காணப்படவில்லை. மேலும் அவர் தொடர்ந்து பொதுவெளியில் இருந்து விலகி இருப்பதால், அவர் கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த தம்பதி தங்கள் முதல் குழந்தையான வமிகா கோலியை ஜனவரி 2021 இல் பெற்றெடுத்தனர்.