
Sports RoundUp: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அபாரம்; இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 34வது ஓவரிலேயே 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்க 77 ரன்களும், சதீரா சமரவிக்ரம 65 ரன்களும் எடுத்து, அணிக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
India women football team loses to Japan
ஜப்பானிடம் படுதோல்வியைத் தழுவிய இந்திய மகளிர் கால்பந்து அணி
வியாழன் அன்று தாஷ்கண்டில் உள்ள லோகோமோடிவ் ஸ்டேடியத்தில் நடந்த ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச் சுற்று இரண்டாவது சுற்றின் சி பிரிவு ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி 0-7 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வியைத் தழுவியது.
ஜப்பானின் ஹொனோகா ஹயாஷி, மினா தனகா, மியாபி மோரியா, கிகோ செய்கே, ஹிகாரு நவோமோட்டோ, யோஷினோ நகாஷிமா கோல்களை அடித்தனர்.
ஜப்பானுக்கு எதிரான தோல்வி, போட்டியின் ஆரம்பத்திலேயே இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்த போட்டியில் மூன்று வெவ்வேறு பிரிவுகளிலும் இருந்து முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 2024 பிப்ரவரியில் திட்டமிடப்பட்ட பாரீஸ் 2024 ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
India Cricket team to get new coach
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது.
இந்நிலையில், ராகுல் டிராவிட் இல்லாத சமயங்களில் இந்திய அணியை வழிநடத்தும் விவிஎஸ் லக்ஷ்மண் நவம்பருக்கு பிறகு முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
India scripts medal history in para asian games 2023
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்தியா
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், வியாழக்கிழமை அன்று போட்டியின் நான்காம் நாளில் இந்தியா 73வது பதக்கத்தை கைப்பற்றியபோது புதிய சாதனை படைத்தது.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இதற்கு முன்னர் 2018இல் 72 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்த நிலையில், தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரா விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, போட்டியின் நான்காம் நாள் முடிவில் இந்தியா 18 தங்கம், 23 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்களை வென்றுள்ளது.
IPL 2024 Auction likely to hold in Dubai
ஐபிஎல் 2024 ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டம்
ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தை முதல்முறையாக, இந்தியாவிற்கு வெளியே துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் ஐபிஎல் ஏலத்தை டிசம்பர் 9ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ள பிசிசிஐ, அதன் பின்னர் ஆடவர் ஐபிஎல்லுக்கான வீரர்கள் ஏலத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதன்படி டிசம்பர் 15 முதல் 19ஆம் தேதிக்குள் இந்த ஏலம் நடைபெறும் என்றும், இது ஒருநாள் மட்டுமே நடக்கும் மினி ஏலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனினும், துபாயில் ஏலத்தை நடத்துவது தற்போது ஆலோசனையில் மட்டுமே உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டும் இஸ்தான்புல்லில் ஏலத்தை வைத்துக் கொள்ள ஆலோசித்துவிட்டு, கடைசியில் கொச்சியில் நடத்தப்பட்டதை போல் நடக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.