Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் ரன்கள் எடுத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் சரிந்தாலும், கிளென் மேக்ஸ்வெல் கடைசி வரை நின்று சதம் அடித்ததோடு, கடைசி பந்தில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். விரிவாக படிக்க
2024இல் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அறிமுகம்
ஐபிஎல்லை போல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டையும் வளர்த்தெடுக்கும் முயற்சியாக 2024 முதல் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற பெயரில் புதிய கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலா 10 ஓவர்களைக் கொண்டு டி10 வடிவத்தில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் டென்னிஸ் பாலை பயன்படுத்தி விளையாட உள்ளனர். முதற்கட்டமாக மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு ஆறு அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன. ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் தேதி இந்த போட்டிகள் தொடங்கும் என்றும், முதல் சீசனில் மொத்தம் 19 போட்டிகள் விளையாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : ஆறு வீரர்களை திரும்பப் பெற்றது ஆஸ்திரேலியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்நிலையில், மூன்றாவது போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் நாடு திரும்புவார்கள் என தெரிவித்துள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆடம் ஜம்பா ஏற்கனவே ஆஸ்திரேலியா கிளம்பிவிட்ட நிலையில், எஞ்சிய வீரர்கள் மூன்றாவது போட்டி முடிந்த பிறகு புதன்கிழமை ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளனர். நாடு திரும்பும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விரிவாக படிக்க
சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் பேட்மிண்டன் : அஸ்வினி பொன்னப்பா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி
சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க நாளான செவ்வாயன்று கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் ரோகன் கபூர் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. மலேசியாவின் பெங் சூன் சான் மற்றும் யீ சீ சேயை முதல் சுற்றில் எதிர்கொண்ட இருவரும் 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றனர். மேலும், பி சுமீத் குமார் ரெட்டி-சிக்கி ரெட்டி ஜோடி, தைவானின் ஹ்சுவான்-யி வு மற்றும் சூ யுன் ஜோடியை 21-14, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், சிராக் சென், ரவியிடம் இருந்து கடுமையான சவாலை முறியடித்து, 21-7, 12-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
உலக வில்வித்தை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பாரா விளையாட்டு வீராங்கனை
செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட உலக வில்வித்தை தரவரிசையில் மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை திறந்த பிரிவில் இந்திய பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி உலகின் நம்பர் 1 இடத்தை கைப்பற்றினார். 230 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்த ஷீத்தல், இரண்டு இடங்கள் முன்னேறி இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் சர்வதேச அளவில் போட்டியிடும் உலகின் முதல் கையில்லாத பெண் வில்வீரர் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார். இதற்கிடையே ஆடவர் பிரிவில் பாரா ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்ற ராகேஷ் குமார் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பிரிட்டனின் நாதன் மக்வீன் மற்றும் இத்தாலியின் மேட்டியோ பொனாசினா ஆகியோருக்குப் பின்னால் இந்தியர் மட்டுமே உள்ளார்.