2024 முதல் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கும் வருகிறது ஐபிஎல்
ஐபிஎல்லை போல ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடர் வரும் 2024 முதல் நடத்தப்பட உள்ளது. தொடக்க இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) மார்ச் 2 முதல் தொடங்கும் என்று போட்டியின் ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) தெரிவித்தனர். ஐஎஸ்பிஎல் என்பது இந்தியாவின் முதல் டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியாகும். மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மொத்தம் ஆறு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளது. முதல் சீசனில் 19 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து போட்டிகளும் மும்பையில் நடைபெற உள்ளது.
ஐஎஸ்பிஎல் தொடருக்கு வரவேற்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, "ஐஎஸ்பிஎல், பலரின் கிரிக்கெட் கனவுகளை ஒரு பெரிய மேடையில் மலரச் செய்யும் வாய்ப்பை வழங்கும். இந்த அற்புதமான முயற்சியில் இருந்து வெளிவரும் வெற்றிக் கதைகளை நான் சந்தேகத்திற்கு இடமின்றி காண ஆவலுடன் காத்திருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார். பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் இது குறித்து கூறுகையில், இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் அசாதாரண திறமைகளுக்கான வாயில்களைத் திறக்கிறது என்று தெரிவித்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலே கூறுகையில், "இது மைதானங்களுக்குள் விளையாட வேண்டும் என்று கனவு காணும் வீரர்களுக்கு ஒரு முக்கிய தளமாக இருக்கும். மேலும் அவர்கள் தங்கள் சிறப்பான திறமைகளை பரந்த பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்த அனுமதிக்கும்." என்றார்.