இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 123 ரன்கள் குவித்தார். டி20 கிரிக்கெட்டில் இது ருதுராஜ் கெய்க்வாட்டின் முதல் சதமாகும். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் அடிக்கும் முதல் சதமாகும். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
கிளென் மேக்ஸ்வெல் சதம்
223 ரன்கள் எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 35 ரன்களும், ஆரோன் ஹார்டி 16 ரன்களும் எடுத்தனர். ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் டிம் டேவிட்டும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ வேட் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை எனும் நிலையில், கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும், அவர் 104 ரன்கள் அடித்து சதம் விளாசினார். இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது.