Sports Round Up : இந்திய கால்பந்து அணி தோல்வி; திருநங்கைகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை; மேலும் பல முக்கிய செய்திகள்
செவ்வாயன்று (நவம்பர் 22) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிச்சுற்றில் கத்தார் இந்திய கால்பந்து அணியை தோற்கடித்தது. இதன் மூலம் தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியே கண்டிராத இந்தியாவின் சாதனை ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் குவைத்தை தோற்கடித்த இந்தியா, தனது இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாரை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கத்தார், இந்திய வீரர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்ததோடு, 3 கோல்களையும் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம், இந்தியா தற்போது இரண்டு போட்டிகளில் ஆறு புள்ளிகளுடன் குழு ஏ'இல் முதலிடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியா
ஜனவரி 2024 தொடக்கத்தில் லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் முதல் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஆப்கான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. மொஹாலி, இந்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் டி20 தொடர் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நிகழ்வுகளுக்கு வெளியே இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒருபோதும் லிமிட்டெட் ஓவர் தொடரில் விளையாடியதில்லை எனும் நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் இருதரப்பு தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2018 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை மட்டும் இருதரப்பு தொடராக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆண்டின் சிறந்த சர்வதேச பேட்மிண்டன் வீரர் விருதுக்கு சாத்விக்-சிராக் ஜோடி பரிந்துரை
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் செவ்வாய்கிழமை ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு பேட்மிண்டன் உலக கூட்டமைப்பால் (BWF) பரிந்துரைக்கப்பட்டனர். டிசம்பர் 11ஆம் தேதி சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் மதிப்புமிக்க ஆண்டின் சிறந்த வீரர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். பாரா பேட்மிண்டனுக்கு மூன்று உட்பட மொத்தம் எட்டு விருது பிரிவுகள் உள்ளன. பரிந்துரைக்கப்பட்டவர்கள் BWF கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு நவம்பர் 1, 2022 முதல் அக்டோபர் 31, 2023 வரையிலான நிகழ்ச்சிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக் மற்றும் சிராக் சமீபத்திய காலங்களில் சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்று தங்கப் பதக்கம் உட்பட பல போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநங்கைகள் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஐசிசி தடை
திருநங்கைகள் எந்தவொரு அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்பு சிகிச்சை செய்து முழு பெண்ணாக மாறியிருந்தாலும், சர்வதேச மகளிர் விளையாட்டுகளில் பங்கேற்க அவர்கள் தகுதி பெற மாட்டார்கள் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டுக்கான பாலின தகுதிக்கு மட்டுமே இந்த முடிவு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதே நேரத்தில் உள்நாட்டு அளவில் பாலின தகுதி என்பது உள்ளூர் சட்டத்தின்படி ஒவ்வொரு தனிப்பட்ட கிரிக்கெட் வாரிய குழுவும் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஐசிசியின் கூற்றுப்படி, இந்த கொள்கையானது பெண்களின் விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது, பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவித்துள்ளது.
யு19 உலகக்கோப்பை இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம்
அரசாங்கத்தின் தலையீடு காரணமாக தீவு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு ஐசிசி மாற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இடையே சில காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தில் ஈடுபட்டதாக அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அரசின் தலையீடு தொடர்ந்ததால், ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஐசிசி வாரிய கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.