டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் ஷர்மா விளையாட உள்ளதாக பரவும் தகவல்; உண்மை என்ன?
2024 உலகக்கோப்பையை வென்ற கையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தற்போது அளித்துள்ள பேட்டியால் அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா பெற்ற முதல் ஐசிசி டிராபி இதுவாகும். இந்நிலையில், இந்த தொடர் முடிந்த உடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிக்க, அவரைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மாவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ரோஹித் ஷர்மா பேசியதன் முழு விபரம்
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்8) நடைபெற உள்ள இந்தியா vs இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா, டி20 குறித்து பேசினார். அவர் பேசுகையில், "முன்பு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டதுபோலவே தற்போதும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். ஆனால், ஒவ்வொருமுறை பெரிய போட்டி வரும்போதும் அழைக்கப்பட்டதுபோல் இனியும் அழைக்கப்படுவேன் என்பதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும். அதனால் நான் முற்றிலும் ஃபார்மேட்டிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று நினைக்கவில்லை." எனக் கூறினார். அவர் இதை நகைச்சுவையாக கூறினாலும், ரசிகர்கள் அவர் மீண்டும் டி20 கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார் என இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதற்கிடையே, டி20 உலகக்கோப்பைக்கு பிறகு, ரோஹித் ஷர்மா தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை விளையாட உள்ளார்.