மகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா
செய்தி முன்னோட்டம்
பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அன்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2025 தொடரின் 12வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.
குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்தே போராடியது. டானி வயட் வெறும் நான்கு ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா 20 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்தார்.
இந்த இன்னிங்ஸ் மந்தானாவின் மிக மெதுவான டி20 ரன் மற்றும் மகளிர் ஐபிஎல் வரலாற்றில் குறைந்தது 20 பந்துகளை எதிர்கொண்ட ஒரு வீராங்கனையின் இரண்டாவது மெதுவான ஸ்ட்ரைக் ரேட் (50.00) ஆக மோசமான சாதனையாகும்.
குறைந்த ஸ்ட்ரைக் ரேட்
மகளிர் ஐபிஎல்லில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட டாப் 3 வீராங்கனைகள்
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டவராக சிம்ரன் ஷேக் உள்ளார்.
அவர் 2023இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 23 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து 47.82 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார்.
இரண்டாவது இடத்தில் மேலே குறிப்பிட்டுள்ளபடி ஸ்மிருதி மந்தனா உள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் தீப்தி ஷர்மா உள்ளார்.
அவர் 2023இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 20 பந்துகளில் 12 ரன்களுடன் 60 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை நடந்த போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 125/7 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 16.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.