
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா
செய்தி முன்னோட்டம்
ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, ஏழாவது இடத்தில் இருந்த ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆறாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் முறையே பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியர்கள் ஆவர்.
ராஜேஸ்வரி கெய்க்வாட் பந்துவீச்சு தரவரிசையில் ஒன்பதாவது இடத்திலும், தீப்தி ஷர்மா ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
icc women cricket ranking updated
இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்
மகளிர் ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நாட் ஸ்கிவர்-ப்ரன்ட், ஹேலி மேத்யூஸை பின்னுக்குத் தள்ளி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
மேலும் பேட்டிங் தரவரிசையிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனை படைத்த சாமரி அட்டப்பட்டு, இரண்டு வாரங்களில் தனது இடத்தை இழந்து மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையை பொறுத்தவரை, பெரிய அளவில் எந்தவித மாற்றமும் இல்லாமல், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதலிடத்தில் நீடிக்கிறார்.