ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டி ஷுப்மன் கில் சாதனை
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ஷுப்மன் கில் படைத்துள்ளார். தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் அவர் இந்த இலக்கை எட்டினார். இந்த போட்டி தொடங்கும் முன் இலக்கை எட்ட 14 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், இந்த போட்டியில் 26 ரன்கள் எடுத்து இலக்கை எட்டினார். முன்னதாக, டெங்குவால் பாதிக்கப்பட்டு இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளை அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2,000 ரன்களை மிக வேகமாக கடந்து சாதனை
2019 இல் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமான கில், அதன் பிறகு தாமதாக 2022இல் தான் கவனம் பெற்றார். இந்நிலையில், வெறும் 38 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை எட்டி ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக, ஹாஷிம் ஆம்லா 40 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. இந்தப் பட்டியலில் இந்தியர்களை பொறுத்தவரை ஷிகர் தவான் 48 இன்னிங்ஸ்களில் 2,000 ரன்களை எட்டி கில்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இதற்கிடையே கில்லின் தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் சராசரி 65க்கும் அதிகமாக உள்ளது. இது, குறைந்தது 1,000 ரன்களைக் கடந்த பேட்டர்களில் இரண்டாவது அதிகபட்சமாகும்.