உலக சாதனை படைத்த ஷஃபாலி வர்மா: ஆசிய விளையாட்டு 2026-ல் இந்திய வீராங்கனை புதிய வரலாறு
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். நிஷினில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற தங்கம் வெல்வதற்கான இறுதிபோட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை லாரா வோல்வார்ட்டின் முந்தைய சாதனையை (824 ரன்கள்) ஷஃபாலி முறியடித்தார். இப்போட்டியில் 7 பந்துகளிலேயே 10 ரன்களை எட்டியதன் மூலம், 2026-ஆம் ஆண்டில் தனது 24-வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடும் ஷஃபாலிவர்மா 825 ரன்களைக் கடந்து, உலகிலேயே ஒரே காலண்டர் ஆண்டில் அதிக சர்வதேச மகளிர் டி20 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
அதிக டி20 ரன்கள்
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்கள் குவித்த வீராங்கனைகள்
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் ஷஃபாலிவர்மா 825* ரன்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் 824 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், ஹாங்காங்கின் நடாஷா மைல்ஸ் 800 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஈஷா ஓஷா (779ரன்கள்) மற்றும் ஹாங்காங்கின் யாஸ்மின் தாஸ்வானி (779ரன்கள்) அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றனர்.
நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் 1 சதம் மற்றும் 7 அரைசதங்களை விளாசி ருத்ர தாண்டவம் ஆடி வரும் ஷஃபாலி, இறுதிப் போட்டியில் அரைசதம் கடந்தால் ஒரே ஆண்டில் ஒன்பது முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த உலகின் முதல் வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையையும் பெறுவார்.
ஸ்மிருதி மந்தனா
அசுர ஃபார்மும் ஸ்மிருதி மந்தனாவின் 11,000 ரன்கள் மைல்கல்லும்
சமீபத்திய ஆட்டங்களில் எதிரணிப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து வரும் ஷஃபாலி வர்மா, கடந்த நான்கு போட்டிகளில் மட்டும் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களை விளாசியுள்ளார்.
முன்னதாக ஜப்பானுக்கு எதிரான காலிறுதியில் 15 பந்துகளில் 40 ரன்களும், வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில் 49 பந்துகளில் 100 ரன்களும் குவித்து இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இதனிடையே, மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 13 ரன்கள் சேர்த்தால், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 11,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீராங்கனை என்ற மாபெரும் புதிய உலக சாதனையையும் தன்வசப்படுத்துவார்.