INDvsPAK : இது ஐசிசி போட்டி மாதிரியே இல்ல; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் விரக்தி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய அளவில் பரபரப்பாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்காமல் பாகிஸ்தான் எளிதாக இந்தியாவிடம் வீழ்ந்தது. முன்னதாக, இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக செயல்பட்டாலும், மிடில் ஆர்டர் பேட்டர்கள் கை கொடுக்காததால் 191 ரன்களில் இந்தியாவிடம் சுருண்டது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் அபார ஆட்டம் மூலம் 31 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் இயக்குனர் இது ஐசிசி போட்டி போன்றே இல்லை என விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மைக் ஆர்தர் கருத்து
போட்டி நடந்த அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் முழுவதும் இந்திய ரசிகர்களே திரண்டிருந்ததால், முழுக்க நீலக்கடல் போல் காட்சியளித்தது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறுகையில், இப்படியொரு ஒரு பாரபட்சமான சூழல் உள்ள மைதானத்தில் விளையாடுவது, இதை பிசிசிஐ நடத்தும் இருதரப்பு போட்டி போன்ற உணர்வைத் தந்தது என்றார். ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான குரல்கள் கேட்கவே இல்லை என்பது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனக் கூறிய அவர், இருப்பினும் இதை தோல்விக்கு ஒரு சாக்காகப் பயன்படுத்த முடியாது என்றும் கூறினார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயமற்ற கிரிக்கெட் விளையாடவில்லை என்பதுதான் நிதர்சனம் எனக் கூறினார்.