டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்த கேள்விக்கு ரோஹித் ஷர்மா பதில்
செய்தி முன்னோட்டம்
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதன்முறையாக, செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தொடங்க உள்ள நிலையில், திங்கட்கிழமை ரோஹித் ஷர்மா ஊடகங்களிடம் உரையாற்றினார்.
செய்தியாளர் சந்திப்பில், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரோஹித் சர்மா தனது பாணியில் பதில் அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் பேசுகிறீர்களா என்று ஒரு நிருபர் கேட்டபோது, ரோஹித் ஷர்மா, "வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், விரைவில் பதில் கிடைக்கும்." என்றார்.
Rohit Sharma speaks about T20 World Cup
டி20 உலகக்கோப்பை குறித்த ஊகங்கள்
2024 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான இந்திய அணியைச் சுற்றி பல ஊகங்கள் உள்ளன.
இந்த தொடருக்கு 2007இல் அனுப்பப்பட்டதை போல், இளம் இந்திய அணியை அனுப்ப வேண்டும் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் உள்ளன.
ஆனால், விராட் கோலி குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது.
மேலும், 2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ரோஹித் ஷர்மா விளையாடாத நிலையில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ளது குறிப்பிடத்தக்கது.