ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள்; ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றின் 37வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் இரண்டு சிக்சர்கள் அடித்ததன் மூலம், இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 58 சிக்சர்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு, 2015இல் டி வில்லியர்ஸும் 58 சிக்சர்களை அடித்திருந்தார். எனினும், டி வில்லியர்ஸ் 18 இன்னிங்ஸ்களில் 58 சிக்சர்களை அடித்த நிலையில், ரோஹித் ஷர்மா 23 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவது அதிக சிக்சர் அடித்த வீரர்
ஹிட்மேன் என்ற புனைப்பெயர் கொண்ட ரோஹித் ஷர்மா, நடப்பு உலகக்கோப்பை தொடரில் முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர் அடித்த வீரர் என்ற மைல்கல்லையும் எட்டியிருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த பிறகு, ரோஹித் ஷர்மா 259 ஒருநாள் போட்டிகளில் 314 சிக்சர்களை அடித்து, அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 331 சிக்சர்களுடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 351 சிக்சர்களுடன் முதலிடத்திலும் உள்ளனர். தற்போது விளையாடி வரும் வீரர்களில் ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 187 சிக்சர்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.