
ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்பது உறுதி எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் வடிவத்திற்கான கேப்டன் ரோஹித் ஷர்மா, பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ரோஹித் ஷர்மா, சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவரது எதிர்காலம் குறித்துப் பல வதந்திகள் பரவிய நிலையில், இந்த ஃபிட்னஸ் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றது, அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பயிற்சி ஆட்டம்
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டம்
இந்தத் தொடருக்குத் தயாராகும் வகையில், ரோஹித் ஷர்மா வரும் மாதத்தில் கான்பூரில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா உள்ளிட்ட வீரர்களும் ஃபிட்னஸ் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வீரர்களின் உடல் தகுதியை அளவிட, வழக்கமான யோ-யோ சோதனைக்கு கூடுதலாக எலும்பு அடர்த்தியைப் பரிசோதிக்கும் டிஎக்ஸ்ஏ (DXA) ஸ்கேனும் பயன்படுத்தப்பட்டது. மேலும், முகமது சிராஜ், யசஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் எந்தவித சிக்கலும் இன்றி ஃபிட்னஸ் சோதனையில் தேர்ச்சி அடைந்தனர்.