ஒருநாள் உலகக்கோப்பையில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டி ரோஹித் ஷர்மா சாதனை
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் புதன்கிழமை (அக்டோபர் 11) நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் தனது 22வது ரன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 1,000 ரன்களை வெறும் 19 இன்னிங்ஸ்களில் எடுத்து, அதிவேகமாக இந்த இலக்கை எட்டிய ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரின் சாதனையும் அவர் சமன் செய்தார். இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில், அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் தற்போது இருவரும் முதலிடத்தில் உள்ளனர். இதற்கிடையே, ஒருநாள் உலகக்கோப்பையில் 1,000 ரன்களைக் கடந்த நான்காவது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் செயல்திறன்
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் சராசரி 60க்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மா 2019 சீசனில் ஐந்து சதங்கள் அடித்தார். இது ஒரு உலகக்கோப்பை சீசனில் ஒரு பேட்டரின் அதிகபட்ச சாதங்களாகும். மேலும் 2015 போட்டியிலும் அவர் ஒரு சதம் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதமடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து முதலிடத்தை தனதாக்கிக் கொள்வார். இதற்கிடையே, ரோஹித் ஷர்மா தவிர, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.