டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதமடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்; சேப்பாக்கத்தில் இரண்டாவது சதம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை விளாசியுள்ளார். சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தினார். போட்டியின் முதல் நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 19) இரண்டாவது அமர்வில் இந்தியா 144/6 என்று சரிந்த பிறகு, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்து அணியை மீட்டனர். இதன் மூலம், அஸ்வின் தற்போது சேப்பாக்கத்தில் இரண்டு டெஸ்ட் சதங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த வங்கதேச கிரிக்கெட் அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
போராடி மீண்ட இந்திய கிரிக்கெட் அணி
முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் ஒரு மணி நேரத்தில் 34/3 என திணறியது. இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இடையேயான ஆக்கப்பூர்வமான பார்ட்னர்ஷிப் இந்தியாவின் பேட்டிங் சரிவைத் தவிர்த்தது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுலும் இந்தியாவை 140 ரன்களுக்குள் கொண்டு சென்றனர். அதற்குள் இந்தியா மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா சிறப்பாக விளையாடியதன் மூலம், இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னையில் இரண்டு டெஸ்ட் சதங்கள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை எட்டினார். இந்திய ஆல்-ரவுண்டர் அஸ்வின் இப்போது தனது சொந்த மைதானமான எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இரண்டு டெஸ்ட் சதங்களைப் பெற்றுள்ளார். அஸ்வின் இந்த மைதானத்தில் தனது கடைசி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 100+ ஸ்கோர்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2021 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சதமடித்ததன் மூலம் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அனில் கும்ப்ளேவுக்கு (619) அடுத்தபடியாக அஸ்வின் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார்.