'அவர் இல்லாமல் 2027 உலகக் கோப்பைக்கு போகவே முடியாது': பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு அஸ்வின் ஓபன் மெசேஜ்
செய்தி முன்னோட்டம்
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் அசாத்திய பந்துவீச்சை இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனதாரப் பாராட்டியுள்ளார். இப்போட்டியில் விராட் கோலி (139*) மற்றும் சுப்மன் கில் (110) ஆகியோர் சதமடித்து அசத்தியிருந்தாலும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 300 ரன்களுக்குள் முடக்கிய குல்தீப் யாதவே ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப் தவிர்க்க முடியாத வீரர் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் புகழாரம்
அவர் இல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல முடியாது
தனது யூடியூப் தளத்தில் பேசிய அஸ்வின் ரவிச்சந்திரன், "இந்த போட்டியில் அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளை மட்டும் பார்க்காதீர்கள்; பலர் இது அவரது கம்பேக் என்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் ஏற்கனவே சர்வதேச அரங்கில் 200 விக்கெட்டுகளை நெருங்கிவிட்ட ஒரு சாம்பியன் சுழற்பந்து வீச்சாளர்".
"அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு குல்தீப் யாதவ் இல்லாமல் இந்திய அணியால் செல்லவே முடியாது".
"அவர் எப்போதுமே ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர்; இனியும் அப்படித்தான் தொடர்வார். அவரது மாயாஜால சுழலுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங் வரிசை ஈடுகொடுக்க முடியவில்லை" என்று கூறினார்.
கம்பேக்
கவுண்டி கிரிக்கெட் அனுபவம்
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் போதிய ஆடும் வாய்ப்புகள் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டிருந்த குல்தீப், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி தனது பார்மை மீட்டெடுத்தார்.
இது குறித்துப் பேசிய அஸ்வின்,"குல்தீப் சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதன் பலன் இப்போது களத்தில் மீண்டும் தெரிகிறது".
"குல்தீப் யாதவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அவர் வெளிப்படுத்திய பந்துவீச்சிலும் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது" என்றார்.
1-0 என முன்னிலையில் உள்ள இந்தியா, தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 30) குவாஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது.