மும்பையில் சச்சின் டெண்டுல்கருடன் தெருவோர கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கான மூன்று நாள் அரசுமுறை பயணமாக திங்கட்கிழமை (நவம்பர் 16) மும்பை வந்தடைந்த பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன், வழக்கமான அரசாங்க நிகழ்ச்சிகளைத் தாண்டி மும்பையின் உண்மையான கலாச்சாரத்தை அனுபவித்தனர். இந்தியாவின் பழமையான புகைப்படக் கூடங்களில் ஒன்றான ஹாமில்டன் ஸ்டுடியோஸ் வெளியே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த அவர்கள், பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் அவருடன் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டனர். அப்போது சச்சின் வழிகாட்டுதலில் மும்பையின் பிரபலமான தெருவோர உணவுகளையும் அவர்கள் ருசித்து மகிழ்ந்தனர்.
கிரிக்கெட் பிணைப்பு
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பையில் தொடர்ந்த கிரிக்கெட் பிணைப்பு
பிரிட்டன் அரச குடும்பத்தின் வருங்கால மன்னர் மற்றும் ராணியுடன் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு ஆளுமைகளில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் இணைந்து நடந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக கடந்த 2016 ஏப்ரல் மாதம் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முதன்முறையாக இந்தியா வந்திருந்தபோது, மும்பை உள்ளூர்ச் சிறுவர்களுடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே மும்பை நகரத்தில் தற்போது சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாடினார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Embed
So it begins… the Prince and Princess of Wales joined Sachin Tendulkar in Mumbai for a game of street cricket on their first engagement in India pic.twitter.com/zTQEKUBPgR
— Kate Mansey (@KateMansey) November 16, 2026
பாலிவுட்
6-வது எர்த்ஷாட் பரிசு விழா மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள்
சுற்றுச்சூழல் சவால்களுக்கு புதுமையான தீர்வு காண்பவர்களை ஊக்குவிக்க 2020 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியம் நிறுவிய எர்த்ஷாட் பரிசு (Earthshot Prize) வழங்கும் விழாவின் ஆறாவது பதிப்பிற்காகவே இவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெறும் இவ்விழாவில் ஐந்து வெற்றியாளர்களுக்குத் தலா ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு வழங்கப்பட உள்ளது.
பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் பிரிட்டிஷ் பாப் இசைக்குழு டேக் தட் (Take That) உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
பிரதமருடன் சந்திப்பு
மும்பை மெட்ரோ பயணமும் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பும்
கடந்த 2024 ஆம் ஆண்டு புற்றுநோய் தடுப்புச் சிகிச்சை பெற்ற பிறகு இளவரசி கேட் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
மும்பையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து நிலையான போக்குவரத்து வளர்ச்சியைப் பார்வையிடும் அரச தம்பதியினர், இந்தியா-பிரிட்டன் இடையிலான தூய எரிசக்தி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளனர்.
பயணத்தின் நிறைவாக புதன்கிழமை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.