புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
இன்று வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூர் மற்றும் லக்னோவைத் தொடர்ந்து, மூன்றாவது கிரிக்கெட் மைதானமாக வாரனாசியில் புதிய மைதானம் கட்டப்படவிருக்கிறது. இது பிரதமர் மோடியின் சொந்த பாராளுமன்றத் தொகுதியாக இருப்பதைத் தொடர்ந்து, அவரே புதிய மைதானத்திற்கான அடிக்கல்லை இன்று நாட்டவிருக்கிறார். மேலும், இன்று உத்தரபிரதேச அரசுத் திட்டத்தின் கீழ் கட்டமைப்பட்டிருக்கும் 16 புதிய பள்ளிகளையும் திறந்து வைக்கவிருக்கிறார் பிரதமர் மோடி. புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் இன்றைய நிகழ்வில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா மற்றும் செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம்:
ரூ.121 கோடி மதிப்புடைய நிலத்தில், ரூ.330 கோடி செலவில் புதிய சர்வதேச மைதானம் கட்டமைக்கப்படவுள்ளதாக பத்திரிகை வெளியீட்டில் உத்திர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 30,000 பேர் வரை அமரும் வசதி கொண்டு கட்டப்படவிருக்கும் இந்த மைதானத்தின் மேற்பகுதியானது பிறை நிலவு வடிவிலும், ஒளி வழங்கும் ஃப்ளட்லைட் அமைப்பானது சூலாயுத வடிவிலும் வடிவமைக்கப்படவிருக்கிறது. மேலும், வாரணாசியில் கட்டப்படவிருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் வடிவமைப்பானது காசியின் சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இருக்கும் எனவும் உத்திர பிரதேச மாநில அரசின் பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு டிசம்பருக்குள், இந்தப் புதிய மைதானத்தின் கட்டமைப்பு முடிவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.