ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீரு தஹாண்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் டிராப் (Trap) துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ராணுவ வீராங்கனை நீரு தண்டாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே மகளிர் டிராப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த நீரு தண்டாவின் இந்த மகத்தான வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வரும் வேளையில், பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தி விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகழாரம்
"கொண்டாட வேண்டிய வரலாற்றுத் தருணம்"
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "நீரு தண்டா இந்தியாவிற்குக் கொண்டாடத்தக்க ஒரு வரலாற்றுத் தருணத்தைப் பரிசளித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் தனிநபர் டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்த அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்".
"அவரது இணையற்ற இலக்குத் துல்லியமும், களத்தில் வெளிப்படுத்திய அசாத்திய நிதானமும் தேசத்திற்கு அளப்பரிய பெருமையைத் தேடித் தந்துள்ளன".
"இந்த சாதனை, பல இளம் விளையாட்டு வீரர்களைத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டைத் தேர்வு செய்யவும், மிக உயரிய விருதுகளை நோக்கிப் பயணிக்கவும் உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.