இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது மற்றும் அதன் வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (ஜூன் 22) தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட இந்தியா வருமா என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக பாகிஸ்தான் அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. பாகிஸ்தான் விளையாடுவது குறித்து தெளிவு பிறக்காததால், போட்டி அட்டவணையை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வர தயங்குவதன் பின்னணி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஜூன் 20 அன்று விலகிய நஜாம் சேத்தி, இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கும் நிலையில் இல்லை என்றும், அரசாங்கத்தின் முடிவுக்கு அது கட்டுப்படும் என்றும் தெரிவித்தார். நஜாம் சேத்தி, இது குறித்து முடிவெடுக்க தான் அரசு அதிகாரிகளை அணுகியதாகவும், அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே உலகக்கோப்பையின் வரைவு அட்டவணையை தங்களால் உறுதிசெய்ய முடியும் என்று ஐசிசிக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் கூறுகையில், விளையாட்டுகளுடன் அரசியலை கலக்கக்கூடாது என்று பாகிஸ்தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். எனினும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்ற இந்தியாவின் கொள்கை ஏமாற்றமளிப்பதாகவும் கூறியுள்ளார்.