ஆசிய கோப்பையை வேறு நாட்டுக்கு மாற்றினால் தொடரிலிருந்து வெளியேற பாகிஸ்தான் முடிவு!
ஆசிய கோப்பையை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்த ஹைபிரிட் மாடலை ஏற்க இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஏற்க மறுத்ததை அடுத்து வேறு வழியின்றி, பாகிஸ்தான் செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பையில் இருந்து முழுமையாக வெளியேறும் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜாம் சேத்தி முன்மொழிந்த 'ஹைப்ரிட் மாடல்' படி, பாகிஸ்தான் தங்கள் நாட்டில் ஆசிய கோப்பையின் 3 முதல் 4 ஆட்டங்களை நடத்தும். அதே நேரத்தில் இந்தியா சம்பந்தப்பட்ட மீதமுள்ள போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடத்தப்படலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
பிசிசிஐ உடன் கைகோர்த்த இதர கிரிக்கெட் வாரியங்கள்
பிசிசிஐ பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலை நிராகரித்துவிட்ட நிலையில், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பிசிசிஐயை பின்பற்றி ஹைபிரிட் மாடலை நிராகரித்துள்ளது. மேலும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் பாகிஸ்தானுக்கு வெளியே போட்டியை நகர்த்துவதற்கான பிசிசிஐயின் முடிவை ஆதரித்துள்ளன என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இந்த மாத இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூடும்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த விஷயம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அறிந்துள்ள நிலையில், அதன் தலைவர் நஜாம் சேத்தி, போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றினால் எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்து அரசு மற்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.