'இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்' : பாகிஸ்தான் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி
சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டியில் விளையாடி வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் முகமது சக்லைன், இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இருப்பதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றும் தங்களது சொந்த நாட்டில் இருப்பது போலவே உணர்வதாகவும் முகமது சக்லைன் கூறியுள்ளார். ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இளம் வீரர்களை கொண்ட அணியுடன் களமிறங்கியுள்ள பாகிஸ்தான், இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. எனினும், தங்கள் அணி வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக முகமது சக்லைன் கூறியுள்ளார்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் செயல்திறன்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் தங்களது முதல் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் ஹாக்கி அணி போராடி 1-1 என டிரா செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி, தங்களது பிரிவில் ஒரு புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஒரு வெற்றி கூட பெறவில்லை என்றாலும், உலகின் தலைசிறந்த ஹாக்கி அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் தென்கொரியா அணியை டிரா செய்துள்ளது அந்த அணிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து வரவுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் அந்த அணி உள்ளது.