எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு அனுமதி
ஜூன் 21 ஆம் தேதி தொடங்கும் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பின் 14வது சீசனில் பங்கேற்க பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவுக்கு வரை இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வியாழக்கிழமை (ஜூன் 8) மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திடமிருந்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன், பெங்களூருவில் நடைபெறும் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க பாகிஸ்தான் கால்பந்து அணி இனி விசா நடைமுறைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
இந்தியா -பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய கால்பந்து போட்டிகள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோசமான உறவு காரணமாக, பாகிஸ்தான் கால்பந்து அணி 2015 ஆம் ஆண்டு இந்தியா நடத்திய எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை தவறவிட்டது. மேலும் பிபா பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்ததை அடுத்து, 2021 இல் நடந்த கடைசி எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் போட்டியையும் தவறவிட்டது. இந்திய அணி கடைசியாக 2018 எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பின் போது சர்வதேச கால்பந்தில் பாகிஸ்தானுடன் விளையாடியது. அந்த போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜூன் 21 ஆம் தேதி நடக்கும் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.