ஒருநாள் உலகக்கோப்பை 2023 : கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அக்டோபர்-நவம்பர் 2023இல் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி பங்கேற்பதை உறுதி செய்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவு மோசமாக இருப்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வருமா வராதா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது அதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே வரவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023இல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது." எனத் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பையில் விளையாட பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ மறுப்பு
2023 ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்ததில் இருந்து இரு தரப்பிலும் மோதல்கள் வெடித்தன. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு செல்லக் கூடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தினார். ஆனால், தற்போது இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் தனது அணியை அனுப்புவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை, அதன் சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் நம்புவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.