PAKvsSL: உலகக்கோப்பைத் தொடரில் இரண்டாவது போட்டியையும் வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்!
ஒருநாள் உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இலங்கை அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசால் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். பெரேரா இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழக்க அரைசதம் அடித்த கையோடு 17வது ஓவரில் ஆட்டமிழந்தார் நிசங்கா. இரண்டாவது ஓவரில் பெரேராவுக்குப் பின்பு நிசங்காவுடன் கைகோர்த்த குசால் மெண்டிசும், நான்காவதாகக் களமிறங்கிய சதீரா சமரவிக்கிரமாவும் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 65 பந்துகளில் சதமடித்து இலங்கை அணியின் சார்பில் ஒருநாள் போட்டியில் குவிக்கப்பட்ட அதிவேக 100 ரன்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் மெண்டிஸ்.
சோபிக்காத பிற இலங்கை பேட்டர்கள்:
குசால் மெண்டிஸூக்கு ஈடுகொடுத்து ஆடிய சமரவிக்கிரமாவும், 121.35 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 108 ரன்களைக் குவித்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இருவருமே 28வது மற்றும் 30வது என அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். டாப் ஆர்டரின் மாயாஜாலத்தைப் பின்பற்றத் தவறிய பிற பேட்டர்கள் ரன்களை குவிக்கத் தவறி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க, முதல் இன்னிங்ஸல் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்களைக் குவித்தது இலங்கை. 345 என்ற சற்று கடினமான ஸ்கோரை சேஸ் செய்ய இரண்டாவதாகக் களமிறங்கிய பாகிஸ்தானின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை.
போராடிய சஃபீக் மற்றும் ரிஸ்வான்:
பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான இமாம்-உல்-ஹக் நான்காவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் அதிர்ச்சிகரமாக எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஃபீக்கும், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் இழுத்துப் பிடித்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் விக்கெட்ட விடாமல், ரன்களையும் குவிக்கத் தொடங்கினர். 33 ஓவர்கள் வரை ஆடிய அப்துல்லா சஃபீக் 109.71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 113 ரன்களைக் குவித்து அசத்தினார்.
பாகிஸ்தான் அணி வெற்றி:
இறுதி வரை போராடிய முகமது ரிஸ்வானுடன் பிற பேட்டர்களும் தங்களது சிறிய பங்களிப்பை அளித்தனர். சஃபீக் மற்றும் ரிஸ்வானின் போராட்டத்திற்குப் பின்பு விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பாகிஸ்தான் அணியில் பெரிய சேதத்தை அது ஏற்படுத்தவில்லை. இறுதியில் 10 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. தொடக்கத்தில் பாகிஸ்தானின் இரு பேட்டர்களை வீழ்த்திய தில்ஷன் மதுசங்காவின் ஓவர்களைத் தவிர, இலங்கை பந்துவீச்சாளர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுகிறது பாகிஸ்தான் அணி.
புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில இந்தியா
தற்போதுள்ள நிலவரப்படி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நியூஸிலாந்து அணி உள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா மூன்றாம் இடத்திலும், நான்காம் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் உள்ளன. இதனிடையே, இன்று இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால், பட்டியலில் முதல் இரண்டு இடங்களில், இந்திய அணி இடம் பிடிக்கும். இந்த புள்ளி பட்டியலில், முதல் நான்கு இடங்களில் இடம் பிடிக்கும் அணிகளே அரை இறுதி போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.