
இதே நாளில் அன்று : 1983 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தினம்
செய்தி முன்னோட்டம்
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
ஜூன் 22, 1983 அன்று, இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெல்லும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது அதுதான்.
ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பாப் வில்லிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஜோடியான கிரேம் ஃபோலர் மற்றும் கிறிஸ் டவாரே வலுவாக தொடங்கி, முறையே 59 பந்துகளில் 33 ரன்களும், 51 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தது. ஆனால் இருவரும் ரோஜர் பின்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
india first time qualifies final
இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மொஹிந்தர் அமர்நாத்தும், கீர்த்தி ஆசாத்தும் இங்கிலாந்தின் மிடில் ஆர்டரை திணறடிக்க, இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், லோயர் ஆர்டரை துடைத்தெறிந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை எடுத்தது.
அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் முறையே 25 மற்றும் 19 ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தனர்.
ஆனால் அமர்நாத் 46 ரன்கள் குவித்ததோடு மூன்றாவது விக்கெட்டுக்கு யஷ்பால் சர்மாவுடன் 92 ரன்கள் சேர்த்தார்.
யஷ்பால் ஷர்மா 61 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து சந்தீப் பாட்டீல் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
மேலும், இதன் மூலம் இந்தியா முதல்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.