ஒருநாள் உலகக்கோப்பை : சாதனை மழையால் நிரம்பி வழிந்த பாகிஸ்தான் vs இலங்கை போட்டி
செவ்வாய்க்கிழமை (அக்.10) நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான போட்டி, ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்தான். பாகிஸ்தான் மற்றும் இலங்கை வீரர்கள் இந்த போட்டியில் நிகழ்த்திய அனைத்து சாதனைகளையும் இதில் பார்க்கலாம். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 344 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் அணி இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக இலக்கை சேஸ் செய்து வென்ற அணி என்ற சாதனை படைத்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக 2011இல் 327 ரன்களை சேஸ் செய்து அயர்லாந்து இந்த சாதனையை தக்கவைத்திருந்தது.
ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் முறையாக இரண்டு அணிகளிலும் தலா இரண்டு சதங்கள்
இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ் (122 ரன்கள்) மற்றும் சமர விக்ரம (108 ரன்கள்) எடுத்து இரண்டு சதங்களை விளாசினர். மறுமுனையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், அப்துல்லா சபீக் (113 ரன்கள்) மற்றும் முகமது ரிஸ்வான் (131 ரன்கள்) எடுத்து இரண்டு சதங்களை விளாசி இருந்தனர். இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியில் நான்கு சதங்கள் அடிக்கப்பட்ட நிகழ்வாக இது மாறியுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர், 1998இல் லாகூரில் நடந்த பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியிலும், 2013இல் நாக்பூரில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியிலும் மட்டுமே இந்த சாதனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆட்டத்தில் இரண்டு அணிகளிலும் நம்பர் 4 வீரர் சதமடித்த முதல் நிகழ்வு
பாகிஸ்தான் மற்றும் இலங்கை மோதிய இந்த போட்டியில், இரு அணிகளிலும் நம்பர் 4 இடத்தில் களமிறங்கிய சமரவிக்ரம மற்றும் முகமது ரிஸ்வான் சதமடித்தனர். இதன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட முதல் போட்டியாக இது மாறியுள்ளது. அதே நேரத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக இந்த சாதனை நிகழ்த்தப்படும் ஐந்தாவது போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் கடைசியாக 2022இல் நடந்த அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து இடையே நிகழ்த்தப்பட்டிருந்தது. ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளை பொறுத்தவரை, கடைசியாக 2020இல் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்த போட்டியில் நிகழ்த்தப்பட்டது.
பாகிஸ்தான் வீரர்களின் சாதனைகள்
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறையாகும். முகமது ரிஸ்வான் 131 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் கம்ரன் அக்மல் 2005இல் எடுத்திருந்த 124 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. அப்துல்லா சபீக் சதமடித்ததன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் தனது அறிமுக போட்டியில் சதமடித்த இளம் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். சபீக் மற்றும் ரிஸ்வான் பார்ட்னர்ஷிப்பில் 176 ரன்கள் எடுத்ததன் மூலம், உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டாவது அதிக பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள்
குஷால் மெண்டிஸ் 65 பந்துகளில் சதமடித்ததன் மூலம், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் 2015ல் வெலிங்டனில் இங்கிலாந்துக்கு எதிராக குமார் சங்கக்கார 70 பந்துகளில் அடித்ததே சாதனையாக இருந்தது. உலகக்கோப்பைகளில் இரண்டு முறை ஒரு போட்டியில் 90+ ரன்களை விட்டுக்கொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை மதீஷ பத்திரனா படைத்துள்ளார். இதற்கு முன்னர், 2015 சீசனில் அடுத்தடுத்த போட்டிகளில் 95 மற்றும் 90 ரன்களை விட்டுக்கொடுத்த கெவின் ஓ'பிரைன் மட்டுமே இந்த மோசமான சாதனையை செய்த ஒரே பந்துவீச்சாளர் ஆவார்.