23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் வரலாற்று சாதனை
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்ததை அடுத்து, டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் அவருக் குவாழ்த்து தெரிவித்தார். ஃபிரஞ்சு ஓபன் 2023 இறுதிப் போட்டியில் கேஸ்பர் ரூட்டை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆட்டத்தில் 7-6 (7/1), 6-3, 7-5 என்ற செட்களில் தோற்கடித்து நோவக் ஜோகோவிச் இந்த சாதனையைப் படைத்தார். இந்த போட்டிக்கு போட்டிக்கு முன்னதாக, ஜோகோவிச் நடாலுடன் தலா 22 கிராண்ட்ஸ்லாம்களுடன் சமநிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போட்டிக்கு பின்பு நடால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "வாழ்த்துகள் நோவக். 23 என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்க முடியாத ஒரு எண். அதை நீங்கள் சாதித்துவிட்டீர்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
நோவக் ஜோகோவிச்சின் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்
நோவக் ஜோகோவிச் பெற்றுள்ள 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 10 ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்கள், ஏழு விம்பிள்டன் பட்டங்கள், மூன்று யுஎஸ் ஓபன் பட்டங்கள் மற்றும் மூன்று ஃபிரஞ்சு ஓபன் பட்டங்கள் அடங்கும். ஃபிரஞ்சு ஓபனை பொறுத்தவரை 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், அதன் பின்னர் தற்போது மூன்றாவது முறையாக பட்டம் வென்றுள்ளார். ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஒரு வீரர் பெற்ற அதிகபட்ச பட்டங்கள் என்பது ஜோகோவிச்சின் 23 பட்டங்கள் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் 22 பட்டங்களுடன் நடாலும், 20 பட்டங்களுடன் பெடரரும் உள்ளனர். மேலும், உலகின் நான்கு தலைசிறந்த டென்னிஸ் போட்டிகளிலும் குறைந்தபட்சம் 3 பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் ஜோகோவிச் கொண்டுள்ளார்.