உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு
காயத்தால் விலகி இருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த வாரம் இந்தியாவில் தொடங்கும் தனது அணியின் ஒருநாள் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஃபீல்டிங் செய்யும் போது அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் மார்ச் மாதத்தில் இருந்து அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஏப்ரல் மாதம் அவரது காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், "பயிற்சி ஆட்டங்களில் ஈடுபடுவதே திட்டம். என்னால் முடிந்தவரை ஈடுபட வேண்டும் என்ற வலுவான விருப்பம் உள்ளது." என்று கேன் வில்லியம்சன், அணி இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக கூறினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆட்டங்கள்
ஒருநாள் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களை பொறுத்தவரை, நியூசிலாந்து செப்டம்பர் 29 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. மேலும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில், 2015 மற்றும் 2019 சீசன்களில் நியூசிலாந்தின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் முக்கிய பங்காற்றிய கேன் வில்லியம்சன் மீண்டும் திரும்புவது அணிக்குத் உத்வேகத்தை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.