ஆசிய விளையாட்டு 2026: மகளிர் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் நீரு தண்டாவின் தங்க பதக்க பின்னணியில் இப்படி ஒரு சுவாரசிய கதையா?
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 நாட்களாக நீடித்த நீண்ட தங்கப் பதக்க ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 26 வயது வீராங்கனை நீரு தண்டா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். ஐச்சி மாகாண பொது துப்பாக்கிச் சுடுதல் வளாகத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த பலத்த மழைக்கு மத்தியிலும் அசாத்திய கவனத்தைக் குவித்த அவர், மகளிர் தனிநபர் டிராப் பிரிவில் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் மகளிர் டிராப் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தனிநபர் தங்கப் பதக்கம் இதுவாகும்.
இறுதிச் சுற்று
புதிய ஆசிய சாதனை
மூன்று நாட்கள் நீடித்த கடுமையான தகுதிச் சுற்றில் 125-க்கு 118 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்த நீரு தண்டா, இறுதிப் போட்டியிலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.
இறுதிசுற்றில் நிர்ணயிக்கப்பட்ட 30 இலக்குகளில் 28 இலக்குகளைத் துல்லியமாகத் தகர்த்து, முந்தைய ஆசிய சாதனையை விட நான்கு இலக்குகளைக் கூடுதலாக வீழ்த்தி புதிய வரலாற்றுச் சாதனையுடன் தங்கத்தை முத்தமிட்டார்.
சீனாவின் சன் யுனாங் 26 புள்ளிகளுடன் வெள்ளியையும், குவைத்தின் ஹஜர் அப்துல்மாலிக் 21 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இறுதித் தொடரில் கடும் அழுத்தத்திற்கு மத்தியிலும் இறுதி ஐந்து இலக்குகளையும் மிகத் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தி வெற்றியை நீரு உறுதி செய்தார்.
முன்னதாக இவர் மகளிர் குழு பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.
தியாகப் பயணம்
உறவினரின் உத்வேகம் முதல் ராணுவ மேடை வரை
ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த நீரு தண்டா, 2018 ஆசிய விளையாட்டில் டிராப் பிரிவில் வெள்ளி வென்ற தனது உறவினர் லக்ஷய் ஷியோரானைப் பார்த்தே இத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
ஆரம்பத்தில் குடும்பத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கொண்டு தகர டின்களைச் சுட்டுப் பயிற்சி பெற்ற நீரு தண்டா, பின்னர் லக்ஷய் அளித்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டார்.
2019-ல் மத்தியபிரதேச துப்பாக்கிச் சுடுதல் அகடாமியில் இணைந்த அவர், இந்திய ராணுவத்தின் ராணுவக் காவல் படையில் நைப்சுபேதாராகப் பணியாற்றி வருகிறார்.
2026-ல் இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் டிராப் வீராங்கனை என்ற சாதனைக்குப் பின், தற்போது ஆசிய விளையாட்டு மேடையிலும் தேசியகொடியை உயரே பறக்கவிட்டுள்ளார்.