ரயில்வே டிக்கெட் பரிசோதகர் முதல் ரூ.1,000 கோடி அதிபர் வரை: எம்.எஸ். தோனியின் சொத்து மதிப்பு மற்றும் தொழில் முதலீடுகள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட்டைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் வீரராக தனது ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது 20 ஆண்டுகால களப் பயணத்திற்குப் பிறகு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். களத்திலிருந்து விடைபெற்றாலும், விளம்பரங்கள், தொழில் முதலீடுகள் மற்றும் விளையாட்டு சார்ந்த நிறுவனங்கள் மூலம் தோனியின் புகழும் வருமானமும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான பல்வேறு ஊடக மதிப்பீடுகளின்படி, தோனியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1,040 கோடி முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தோனி தரப்பிலிருந்து தணிக்கை செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ சொத்து விவரங்கள் வெளியிடப்படாததால், இவை ஊடக மதிப்பீடுகளாகவே பார்க்கப்படுகின்றன.
சொகுசு வாகனம்
ராஞ்சியில் 7 ஏக்கர் 'கைலாஷ்பதி' பண்ணை வீடு
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தோனியின் 'கைலாஷ்பதி' பண்ணை வீடு மிகவும் பிரபலமானது. பசுமையான தோட்டம், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றுடன் குதிரைகள் மற்றும் நாய்கள் வளர்க்கப்படும் இப்பண்ணை வீட்டின் ஆரம்பக்கட்ட கட்டுமான மதிப்பு சுமார் ரூ.6 கோடி எனக் கூறப்படுகிறது.
வாகனங்கள் மீது தீராத காதல் கொண்ட தோனியின் கேரேஜில் ஃபெராரி 599 ஜிடிஓ, ஹம்மர் எச்2, நிசான் ஜோங்கா, ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாக் போன்ற விலை உயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதுதவிர யமஹா ஆர்டி350, கவாசாகி நிஞ்ஜா எச்2, சுசுகி ஹயபுசா, ஹார்லி டேவிட்சன் மற்றும் டுகாட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்களையும் அவர் சேகரித்து வைத்துள்ளார்.
விளம்பரங்கள்
திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில் முதலீடுகள்:
ரயில்வே டிக்கெட் பரிசோதகராக வாழ்க்கையைத் தொடங்கி இந்திய கிரிக்கெட்டின் உச்சத்தைத் தொட்ட தோனி, தனது வருமானத்தைத் திறம்படப் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
செவன் விளையாட்டு ஆடை நிறுவனம், சென்னை எஃப்சி கால்பந்து அணி, கருடா ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.
மேலும், தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களைத் தயாரித்துப் பொழுதுபோக்குத் துறையிலும் தடம் பதித்துள்ளார்.
முன்னணி நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் தொடர்வதால், ஓய்வுக்குப் பிறகும் தோனியின் பொருளாதார வெற்றி வலுவாகத் தொடர்கிறது.