Loading...
சர்வதேச ஓய்வின் போது பதிவிட்ட அதே பாடலுடன் ஐபிஎல் ஓய்வையும் அறிவித்து ரசிகர்களைக் கண்கலங்க வைத்த எம்.எஸ். தோனி
MSD இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவு ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது

சர்வதேச ஓய்வின் போது பதிவிட்ட அதே பாடலுடன் ஐபிஎல் ஓய்வையும் அறிவித்து ரசிகர்களைக் கண்கலங்க வைத்த எம்.எஸ். தோனி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
07:17 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து வீரராக ஓய்வு பெறுவதாக அறிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவு ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது பயன்படுத்திய புகழ்பெற்ற பழைய இந்திப் பாடலான "மெயின் பல் தோ பல் கா ஷாயர் ஹூன்" பாடலின் மற்றொரு பதிப்பை பின்னணியில் இணைத்து இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

தோனி நெகிழ்ச்சி

"ரசிகர்கள் என்னைத் தவறென்று நிரூபித்துவிட்டார்கள்"

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தோனி,"ரசிகர்கள் என்னைத் தவறென்று நிரூபித்துவிட்டார்கள். இதை ஏற்றுக்கொள்ள இதைவிடச் சிறந்த பாடல் எதுவும் இல்லை. ஒருவேளை நான் அந்தத் தவறைச் செய்துவிட்டு, பின்னர் அதை ஏற்றுக்கொள்வதற்காகவே இந்தப் பாடலுக்கு இரண்டு பதிப்புகள் உருவாக்கப்பட்டன போலும்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச ஓய்வின்போது "நான் ஒரு நொடிப் பொழுது கவிஞன், என் கதை ஒரு நொடிப் பொழுதே" என்ற அர்த்தம் கொண்ட பாடலைப் பதிவிட்ட தோனிக்கு, ரசிகர்கள் அளித்த எல்லையற்ற அன்பும் ஆதரவும் அவரை தவறென்று நிரூபித்து, இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க வைத்துள்ளதை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி

அமைதியாக ஓய்வு முடிவை அறிவித்த பின்னணி

45 வயதாகும் தோனி, தொடர் காயங்கள் காரணமாக 2026 ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இந்நிலையில், ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்பான வீரர்கள் தக்கவைப்பு குறித்த வீடியோ கால் ஆலோசனையின் போது, சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலைப் படித்துக் கொண்டிருக்கையில், "ஒருவேளை நீங்கள் என் பெயரையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம்" என தோனி அமைதியாக கூறியதாக சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் தெரிவித்துள்ளார்.

வீரராக விடைபெற்றாலும், ஐபிஎல் 2027 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மென்டர்-ஆக தோனி புதிய பொறுப்பேற்கவுள்ளார்.

"தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை" என அணி உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சாதனை

தோனியின் ஐபிஎல் சாதனைத் துளிகள்

278 போட்டிகளில் விளையாடி 5,439 ரன்கள் (சராசரி 38.30, ஸ்ட்ரைக் ரேட் 137.45, 24 அரைசதங்கள்).

டெத் ஓவர்களில் பல அதிரடி சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 264 சிக்ஸர்கள்.

ஐபிஎல் வரலாற்றில் 200-க்கும் மேற்பட்ட விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்களை (154 கேட்ச்கள், 47 ஸ்டம்பிங்குகள்) செய்த ஒரே வீரர்.

சிஎஸ்கே அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களை வென்று கொடுத்த வரலாற்று நாயகன்.

ADVERTISEMENT