உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 : மீராபாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 இல் பங்கேற்கும் ஐந்து பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு வழிநடத்துகிறார். செப்டம்பர் 4 முதல் 17 வரை நடைபெறும் இந்த போட்டி, பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு போட்டியிடுகிறார். அதேசமயம், 2021 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற பிந்த்யாராணி தேவி, மகளிருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கிறார்.
இந்திய அணி வீரர்களின் முழு பட்டியல்
ஆடவர் பளுதூக்கும் அணியில் அச்சிந்தா ஷூலி, நடப்பு தேசிய சாம்பியனான நாராயண அஜித் ஆகிய இருவரும் 73 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகின்றனர். புதுடெல்லியில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷுபம் தோட்கர் 61 கிலோ எடைப்பிரிவில் களமிறங்குகிறார். யூத் ஒலிம்பிக் கேம்ஸ் சாம்பியனான ஜெர்மி லால்ரின்னுங்கா காயம் காரணமாக சோதனைகளைத் தவறவிட்டதால், உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023க்கு முன்னோடியாக இருக்கும். ஷுபம் தோட்கரைத் தவிர, அதே அணி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்சூவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.