
காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று மீராபாய் சனு புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பளுதூக்குதல் நட்சத்திரமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்பியுள்ளார். பெண்கள் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 193 கிலோ (ஸ்னாட்ச் 84 கிலோ + க்ளீன் அண்ட் ஜெர்க் 109 கிலோ) எடையைத் தூக்கி, ஸ்னாட்ச், க்ளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்த எடை ஆகிய மூன்றிலும் புதிய காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சாதனைகளைப் படைத்தார். காயம் காரணமாக ஒரு வருடம் இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய மீராபாய் சானுவுக்கு, ஆறு முயற்சிகளில் மூன்றை மட்டுமே வெற்றிகரமாக முடிக்க முடிந்ததால், ஆட்டத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தது.
வெற்றி
மீண்டெழுந்து வென்ற மீராபாய் சனு
அவர் தனது வலது முழங்காலில் அசௌகரியத்தைக் காட்டி, முதல் ஸ்னாட்ச் முயற்சியில் (84 கிலோ) தோல்வியுற்றார். எனினும், கடுமையான போட்டி இல்லாததால், அவர் 109 கிலோ எடையைத் தூக்கி வெற்றி பெற்றார். தான் முன்பு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மற்றும் இரண்டு காமன்வெல்த் விளையாட்டுக்களில் பதக்கங்களை வென்ற 48 கிலோ எடைப் பிரிவுக்கு 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீராபாய் சானு திரும்புவது இந்தப் போட்டியின் முக்கிய அம்சமாகும். இந்தப் போட்டியில் மலேசியாவின் ஐரின் ஹென்றி 161 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், வேல்ஸின் நிக்கோல் ராபர்ட்ஸ் 150 கிலோ எடையுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.