ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்; மீண்டும் மஹேல ஜெயவர்த்தனே நியமனம்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயவர்த்தனே இதற்கு முன்பு 2017 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார். அதன் பிறகு 2022இல் உலகளவில் இயங்கும் அனைத்து மும்பை இந்தியன் அணிகளுக்கான செயல்திறன் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மார்க் பவுச்சரின் தலைமையின் கீழ், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2024இல் ஒரு சவாலான பருவத்தைக் கொண்டிருந்தது. ரோஹித் ஷர்மா மாற்றப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக்கப்பட்ட நிலையில், அந்த தொடரில் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து படுதோல்வி அடைந்தது.
மஹேல ஜெயவர்த்தனேவின் முந்தைய செயல்பாடு
மார்க் பவுச்சர் தலைமையின் கீழ் மோசமான தோல்வியை பெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மஹேல ஜெயவர்த்தனேவை மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு கொண்டுவரும் முடிவை எடுத்துள்ளது. மஹேல ஜெயவர்த்தனே தனது முந்தைய பயிற்சியாளர் பதவிக் காலத்தில், 2017, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஐபிஎல் பட்டங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தினார். இந்நிலையில், மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்குத் திரும்புவது குறித்து மஹேல ஜெயவர்த்தனே தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, ஜெயவர்த்தனேவை மீண்டும் வரவேற்றார். மேலும், மார்க் பவுச்சரின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, கடந்த இரண்டு சீசன்களில் அவர் செய்த பங்களிப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.