மீண்டும் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பும் லியோனல் மெஸ்ஸி!
லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார். மெஸ்ஸியின் முகவராகவும் இருக்கும் ஜார்ஜ், பிஎஸ்ஜி கால்பந்து அணியிலிருந்து ஏற்கனவே பிரிந்துவிட்டதால், தனது மகனுக்காக ஒரு புதிய கிளப்பில் ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியில் இருக்கிறார். முன்னதாக, லா லிகாவில் ஃபைனான்சியல் ஃபேர் ப்ளே காரணமாக மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு ஒப்பந்தம் கொடுக்கத் தவறியதால், 2021 இல் பார்சிலோனாவை விட்டு வெளியேறி பிஎஸ்ஜியில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் இணைந்தார். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி அனைத்து காலத்திலும் சிறந்த கால்பந்து வீரராக பரவலாகக் கருதப்படுகிறார். மேலும் அவர் 2004 முதல் 2021 வரை பார்சிலோனாவுடன் ஒவ்வொரு கோப்பையையும் வென்றார்.
ஜார்ஜ் மேற்கொண்டு வரும் முயற்சி
ஜார்ஜ் பார்சிலோனா தலைவர் ஜோன் லபோர்டாவை அவரது வீட்டில் சந்தித்து லியோனல் மெஸ்ஸியின் மெகா டிரான்ஸ்ஃபர் நடவடிக்கை பற்றி விவாதித்தார். கடந்த இரண்டு மாதங்களாக மெஸ்ஸி தனது முன்னாள் கிளப்பான பார்சிலோனாவில் இணைவார் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. மேலும் பார்சிலோனா தலைவர் மற்றும் அவர்களின் மேலாளர் சேவி ஆகியோர் லெஜண்ட் கேம்ப் நௌவில் மீண்டும் வர வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கிடையே மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்யும் திட்டத்திற்கு பார்சிலோனாவுக்கு லா லிகா கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், கிளப் இன்னும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை மெஸ்ஸிக்கு வழங்கவில்லை.