'ஐபிஎல்லில் தன்னை வேதனைப்படுத்திய அந்த சம்பவம்' : மனம் திறந்த கபில்தேவ்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பிர் இடையே களத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரின் நடத்தைக்காகவும், பின்னர் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். இந்நிலையில், 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்த சம்பவம் தன்னை மிகவும் வேதனைப்படுத்தியதாக கூறியுள்ளார். அதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மைதானத்திற்கு வெளியே, வீரர்களை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.
முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதன் முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தி வீக் இதழுக்கு அளித்த பேட்டியில், "என்னுடைய இரண்டு முக்கியமான நபர்கள் அவர்கள். விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவர் ஆவார். கவுதம் காம்பிர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர்களால் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது? ஆனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் மனதை இழக்கிறார்கள். கால்பந்து ஜாம்பவான் பீலே முதல் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் வரை அனைவரும்கூட." என்று கூறினார். மேலும், "பிசிசிஐ நல்ல குடிமக்களாக இருக்க வீரர்களை வளர்க்க வேண்டும். ஐபிஎல்லில் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையே நடந்தது எனக்கு வேதனையாக இருந்தது." என்று கூறினார்.