உலக கோப்பை: இங்கிலாந்துடனான முதல் போட்டியிலிருந்து வெளியேறினார் கேன் வில்லியம்சன்
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி நிர்வாகம். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பாக விளையாடினார் கேன் வில்லியம்சன். அப்போது ஃபீல்டிங்கின் போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வந்தார் கேன் வில்லியம்சன். இந்த உலக கோப்பையில் அவர் விளையாடுவாரா மாட்டார என குழப்பம் நிலவி வந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவாரா கேன் வில்லியம்சன்:
உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக, இன்றும், அக்டோபர் 2ம் தேதியும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில், ஃபீல்டிங் செய்யாமல் பேட்ஸ்மேனாக மட்டும் கேன் வில்லியம்சன் பங்கெடுப்பார் என அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி நிர்வாகம். அதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியின் போது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலுமே கேன் வில்லியம்சன் பங்கெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளின் போது, அவரது உடற்தகுதியையும் சோதனை செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி நிர்வாகம். இந்தப் பயிற்சிப் போட்டிகளில் கேன் வில்லியம்சனுக்கு மாற்றாக, டாம் லதாம் அணியை வழிநடத்தவிருக்கிறார்.