ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) செவ்வாய்க்கிழமை (மே 16) வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக இசிபி அறிவித்தது.
காயத்தால் அவதிப்பட்டு வந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆகஸ்டில் அணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது முழு உடற்தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் மார்ச் 2022 க்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் அணிக்குத் திரும்பினார்.
england cricket squad for ireland test
இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல்
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வெடுத்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மீண்டும் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றாலும், விளையாடும் 11'இல் வாய்ப்பு கிடைக்காத பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக ஒல்லி போப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணி : பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.