
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுகள்; கபில்தேவின் நீண்டகால சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, வெளிநாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்பு வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் 12 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை வைத்திருந்த நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது 13வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரை வெளியேற்றி இந்த மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஐந்து விக்கெட்டுகள்
ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குறிப்பிடத்தக்க ஃபார்மில் உள்ளார். முன்னதாக, ஹெடிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவரது 13 ஐந்து விக்கெட் சாதனையில் இப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு முறை ஐந்து விக்கெட்டுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று மற்றும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக இரண்டு ஆகியவை அடங்கும். கூடுதலாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையையும் பும்ரா முறியடித்துள்ளார். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவரது 12வது ஐந்து விக்கெட்டாகும்.