IPL 2027: மும்பை இந்தியன்ஸில் இருந்து பஞ்சாப் கிங்ஸுக்கு மாறினார் ஹர்திக் பாண்டியா; என்ன விலைக்கு வாங்கப்பட்டார்? யாருடன் எக்ஸ்சேஞ்?
செய்தி முன்னோட்டம்
IPL 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு கெடுவிற்கு முன்னதாக, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்து IPL நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஹர்திக் பாண்டியா தனது பழைய கட்டணமான ₹16.35 கோடியில் இருந்து உயர்த்தப்பட்டு, ₹18 கோடி தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணையவுள்ளார். அதே வேளையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அவரது தற்போதைய ஒப்பந்தத் தொகையான ₹18 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார்."
பின்னடைவு
மும்பை இந்தியன்ஸில் ஹர்திக் பாண்டியாவின் பின்னடைவு
2015-இல் மும்பை அணி மூலம் IPL பயணத்தை தொடங்கிய ஹர்திக் பாண்டியா, 2022-இல் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு சென்று அறிமுக ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.
2024-இல் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய அவர், ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சந்தித்த மும்பை அணி, 2024-இல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
2025-இல் குவாலிஃபையர் 2 வரை முன்னேறினாலும், 2026-ஆம் ஆண்டு சீசனில் மீண்டும் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கடந்த 5 மாதங்களில் முதுகு பிடிப்பு, கால் தசைநார் காயம் எனத் தொடர் காயங்களால் அவதிப்பட்ட ஹர்திக் பாண்டியா, 2026 சீசனிலும் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அர்ஷ்தீப் விடைபெறல்
பஞ்சாப் கிங்ஸின் மாபெரும் நகர்வு
முதலாவது ஐபிஎல் கோப்பையை வெல்லத் தீவிரமாக முயற்சி செய்து வரும் பஞ்சாப் கிங்ஸ், தங்களது முக்கியப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை விட்டுக்கொடுத்து ஹர்திக் பாண்டியாவைக் கைப்பற்றியுள்ளது.
பஞ்சாப் அணிக்காக 96 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங், தற்போது மும்பை அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவுக்கு பலம் சேர்க்கவுள்ளார்.
மும்பை அணிக்கு கோப்பை வென்று தரத் தவறியதால் ஹர்திக் பாண்டியாவை விடுவித்து, பந்துவீச்சை வலுப்படுத்த மும்பை நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.