IPL 2027: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஹர்ஷல் படேலை ரூ.4 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்
செய்தி முன்னோட்டம்
2027 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏலத்திற்கு முன்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலை முழு ரொக்கப் பரிமாற்றம் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது. 2025 மெகா ஏலத்தில் ஹர்ஷல் படேலை சன்ரைசர்ஸ் அணி வாங்கிய தொகையில் பாதியான ரூ.4 கோடிக்கு இந்த டிரேட் முடிவாகியுள்ளது. இதன் மூலம், வரும் ஏலத்திற்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கையிருப்புத் தொகையில் ரூ.4 கோடி குறையும்.
ஹர்ஷல் படேல்
ஹர்ஷல் படேலின் 5-வது ஐபிஎல் அணி குஜராத் டைட்டன்ஸ்
2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஹர்ஷல் படேலுக்கு, குஜராத் டைட்டன்ஸ் 5-வது அணியாகும்.
இதற்கு முன்பு அவர் RCB, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கடந்த இரண்டு சீசன்களாக SRH ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2025 மெகா ஏலத்தில் ஹர்ஷல் படேலை ரூ.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் வாங்கியது. முதல் சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை (எகானமி 9.80) வீழ்த்தினார்.
ஐபிஎல் 2026 தொடரில் பிரஃபுல் ஹிங்கே மற்றும் சாகிப் ஹுசைன் போன்ற அறிமுக இந்திய வீரர்களுக்கு சன்ரைசர்ஸ் முன்னுரிமை அளித்ததால், ஹர்ஷலுக்கு வாய்ப்புகள் குறைந்தன.
வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 10.82 என்ற எகானமி ரேட்டில் ரன்களை விட்டுக்கொடுத்தார்.
பர்பிள் கேப்
சொந்த ஊர் அணியில் இணையும் ஹர்ஷல் படேல்
ஆர்சிபி அணிக்காக 2021-ல் 32 விக்கெட்டுகளையும், பஞ்சாப் அணிக்காக 2024-ல் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இரண்டு முறை 'பர்பிள் கேப்' வென்றுள்ளார்.
புவனேஷ்வர் குமார், டுவைன் பிராவோ மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பர்பிள் கேப் வென்ற 4-வது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதம் 36 வயதை எட்டும் ஹர்ஷல் படேல் அகமதாபாத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்காகக் குஜராத் அணிக்கு மாறிய அவருக்கு, தற்போது ஐபிஎல் தொடரிலும் சொந்த மாநில அணியான குஜராத் டைட்டன்ஸ் சார்பில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.